பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெறுவதற்காக ராஜேஷ் தாஸ் இன்று (09.08.2021) விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, சட்ட ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் பாதுகாப்பு பணியில் இருந்தார். எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு, ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் எஸ்.பி. புகார் அளித்திருந்தார். இது சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்த விசாரணை தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கடந்த 29ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே ராஜேஷ் தாஸ் ஆகஸ்ட் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜாராகி குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டார். இவர் மீது ஏற்கனவே துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.