Skip to main content

" அடுத்தவர்களைக் குறைசொல்லி வாக்கு சேகரித்தால் வரும் பாதகத்தை உணர்ந்தவன் நான்.." - ராஜேந்திர பாலாஜி

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

jkl

 

"தேர்தலில் நாம் யாரையும் குறைசொல்லி வாக்கு கேட்க வேண்டாம், அதன் பின்னணியை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான்" என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுக கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சர்ச்சை பேச்சுக்களை அடிக்கடி பேசி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்குத் தலைப்பு எடுத்துக் கொடுத்து வந்தஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கடந்த மாதம் தமிழகக் காவல்துறை பெங்களூரில் கைது செய்தது. சுமார் 2 வாரகால சிறைவாசத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சிறையிலிருந்து வெளியே வந்தார். தன்னுடைய இயல்புக்கு மாறாகத் தொடர்ந்து அமைதியாக இருந்து வரும் அவர், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சிவகாசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், வேட்பாளர்கள் மக்களிடம் மிகவும் அமைதியாக வாக்கு கேளுங்கள், யாரையும் பற்றி யாரும் குறை கூறி வாக்கு கேட்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் நாம் களப்பணிகளைத் தீவிரமாக ஆரம்பிக்க வேண்டும். அதிமுக தொழில் அதிபர்களையோ, செல்வந்தர்களையோ நம்பி உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. மாறாகத் தொழிலாளர்கள், பாட்டாளி மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கம். சோதனைகள் வரும் போதெல்லாம் சாதனைகள் கிடைக்க வைக்கும் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் நம்முடையது. எனவே வேட்பாளர்கள் யாரைப் பற்றியும் குறைசொல்லாமல், நம் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள். ஏனென்றால் குறை சொன்னால் அதனால் ஏற்படும் பின்விளைவை அறிந்தவன் நான் என்ற முறையில் சொல்கிறேன். எனவே கடுமையாக உழையுங்கள், வெற்றி நிச்சயம் கிட்டும்" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்