Skip to main content

ஜன.20 வரை ராஜேந்திர பாலாஜிக்கு சிறை!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

 Rajendra Balaji jailed till Jan. 20

 

பண மோசடி வழக்கில் ஜனவரி 20 ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

 

3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நேற்று கர்நாடகா ஹசன் பகுதியில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் அழைத்து வந்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜிடம் மதுரை சரக டிஐஜி காமினி, விருதுநகர் எஸ்பி மனோகரன் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இன்பத்தமிழன் உட்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

விசாரணைக்குப் பிறகு விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பு ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள சிவகாசி பிரதான சாலையில் உள்ள நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் 300க்கு மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரபாலாஜி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ராஜேந்திர பாலாஜி தரப்பில், ''எங்களது முன்ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது எனவே இந்த கைது நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்" என நீதிபதி முன் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு தரப்பில் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. 

 

இந்நிலையில் கைது நடவடிக்கையை ரத்து செய்தால் வெளியூர் செல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ராஜேந்திர பாலாஜி தரப்பு கூற, 20 நாட்களாக வெளியூரில் இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பிய விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர், ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்