
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் கரையோரமிருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் ஒருவர் தொடுத்த வழக்கில் மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் மீண்டும் வந்த போது, கண்ணையா என்ற முதியவர் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஜா அண்ணாமலைபுரம் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை நாளை (10/05/2022) அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.