தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அசோக் நகர் 4 ஆவது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் ஜி.எஸ். சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.