வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று (25.11.2023) மழை நீடிக்கும். குறிப்பாகச் சென்னையில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை கிண்டி, மடிப்பாக்கம், கோட்டூர்புரம், அடையாறு, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், பம்மல், வேளச்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.