Skip to main content

மழை எச்சரிக்கை; விழுப்புரத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 03/12/2024 | Edited on 03/12/2024
 Rain warning; Tomorrow is a holiday for schools and colleges in Villupuram

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (03.12.2024) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நேற்று (02.12. 2024) காலை, வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது.

இது இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. எனவே இன்று (03.12.2024) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (04-12-2024) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு நாளை மறுநாள் (05.12.2024) முதல் வரும் 9ஆம் தேதி (09.12.2024) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் நேற்று எங்கே பகுதிகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர் மழை மற்றும் நீர் தேங்கும் பகுதிகளை சீரமைப்பது உள்ளிட்ட காரணங்களால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (04/12/2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்