‘கல்வி அலுவலரின் பாலியல் வேட்டை! சிக்கித் தவிக்கும் பெண்கள்!’என்னும் தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 21- 23 நக்கீரன் இதழில், விருதுநகர் மாவட்டம்- சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மோகனும், ஊர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஆசிரியையும், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகம் சுளிக்கும் விதத்தில் நடந்துவருவது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியைகளை விரட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோகனுக்குப் போய் மாவட்ட கல்வி அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது குறித்த ஆசிரியர் சங்கத்தினரின் ஆதங்கத்தையும் அக்கட்டுரையில் பதிவு செய்தோம். நக்கீரன் இதழிலும் இணையத்திலும் இச்செய்தி வெளிவந்தவுடன், பெற்றோர், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் சத்திரரெட்டியபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில், மோகன் மீதும் அந்த ஆசிரியை மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
விருதுநகர் இன்சார்ஜ் டி.இ.ஓ.வாக இருந்த மோகன், கூடுதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில்,‘மோகனையும் ஊர்மிளாவையும் இன்னும் ஏன் இடமாற்றம் செய்யவில்லை?’என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானமும் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினிக்கு அழுத்தம் தர, இருவரும் பிள்ளையார் நத்தம் மற்றும் கட்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“ஆதாரங்களுடன் நக்கீரன் வெளியிட்ட செய்தியால் விருதுநகர் கல்வி மாவட்டத்துக்கு நல்லது நடந்திருக்கிறது” என்று நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் “ஆனாலும்.. விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் உதவியாளர்கள் இருவர் மோகனின் தகாத நடவடிக்கைகளுக்கு சகலவிதத்திலும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் மீது ஏனோ நடவடிக்கை இல்லை.”என்று குறைப்பட்டுக்கொண்டார்.
வரும் கல்வியாண்டிலாவது விருதுநகர் கல்வி மாவட்டம் பொதுத்தேர்வு தேர்ச்சியில் மீண்டும் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறது ஆசிரியர் தரப்பு.