
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மழை நீரில் நெல் வீணாவதைத் தடுக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளதாகவும், இது சம்பந்தமான முழு விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதைத் தடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறி, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.