Skip to main content

சென்னையில் மழை- 13 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
Rain in Chennai- Rain alert for 13 districts

கடந்த ஒரு வார காலமாக வட மாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கமாக தமிழக பகுதிகளில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. சென்னை வளசரவாக்கம், முகலிவாக்கம், போரூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளிலும், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, கீழ்மணம்பேடு, வெள்ளவேடு, புதுச்சத்திரம், ஜமீன் கொரட்டூர் உள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய  மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென் சென்னை பகுதியில் இரவு நேரத்தில் நகரின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்