தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
டிசம்பர் 15, 16 ஆகி தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 12 முதல் 20 சென்டி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், மயிலாடுதுறை, நெல்லை, நாகை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.