சேலம் கோட்டத்தில், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணம் செய்த நபர்களிடம் இருந்து 4.75 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் ரயில்வே கோட்டம், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை 305 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகம்.
சேலம் போடிநாயக்கன்பட்டியில் ரயில்வே கீழ் பாலம் 2.83 கோடி ரூபாயில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே நிலத்தை பயன்படுத்துவது குறித்து டெபாசிட் செலுத்துவது தொடர்பாக சேலம் மாநகராட்சிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதினோம். இது பொதுமக்களுக்கான பாலம் என்பதால் மாநகராட்சிதான் நிதி ஒதுக்க வேண்டும்.
சமூக விரோதிகள் சிலர் ரயில் தண்டவாளங்களில் கற்கள் வைக்கின்றனர். தண்டவாளத்தின் கொக்கிகளையும் கழற்றி விடுகின்றனர். ஆத்தூர் அருகே அண்மையில் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. குற்றங்களைத் தடுக்க பிரச்னைக்குரிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். சேலம் ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் 800 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 77425 பேர் டிக்கெட் இன்றி பயணம் செய்துள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 1.12 லட்சம் பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து 4.75 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.