
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கடந்த மாதம் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து அவரது பினாமிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் பினாமியாக செயல்பட்டது தெரியவந்தது.
முன்னதாக வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்றபோதே, ‘புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் சில பினாமிகள் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்றும், அவர்கள் திக் திக் மனநிலையில் உள்ளார்கள்’ என்றும் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது.
நாம் சொன்னது போலவே முதற்கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் முள்ளங்குறிச்சி ஊ.ம.தலைவர் காந்திமதியின் கணவரும் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளராகவும் உள்ள முருகானந்தத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல், முருகானந்தத்தின் சகோதரர்களான பழனிவேல், ரவி ஆகியோரின் புதுக்கோட்டை மற்றும் கடுக்காக்காடு ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், புதுக்கோட்டை நகரில் உள்ள வணிகவளாகம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்துவருகின்றனர்.

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் 10 பேர் பழனிவேல் மற்றும் முருகானந்தம் ஆகியோர் வீட்டிலும், சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தலைமையில் 10 பேர் ரவி வீட்டிலும் காலை 6 மணி முதல் சோதனை செய்துவருகின்றனர். இந்தச் சோதனையில் கடந்த காலங்களில் முறைகேடாக அரசு ஒப்பந்தங்கள் பெற்றது; வருமான வரம்பை மீறி சொத்துகள் சேர்த்தது உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் தொடர்பில் இருந்ததும், அவர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஒரு டன் ஆட்டுக்கறி உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்கொண்டதும் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. இச்சோதனை மாலை வரை நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் சோதனை தொடங்கிவிட்ட தகவல் அறிந்து தஞ்சையில் உள்ள பினாமி கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆவணங்களை மாற்றும் வேலையும் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.