மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களான, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தனிவிமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு வந்து சேர்ந்து, தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினர்.
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்றும், தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தொடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பேசியது வருமாறு:
"இந்தியாவில் மக்களவை, சட்ட சபைகள், பஞ்சாயத்துகள், நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் உள்ளிட்ட நிறுவனங்கள், தேசத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நிறுவனங்கள் அனைத்திலும் தாக்குதலை நாம் கண்டிருக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்று உங்களுக்குச் சொல்ல வருத்தமாக இருக்கிறது. அது இறந்துவிட்டது. ஏனெனில் ஆர்எஸ்எஸ் எனும் அமைப்பு, நிறுவன சமநிலையில் ஊடுருவி தொந்தரவு செய்யவும் அழிக்கவும் பெரும் நிதியைக் கொண்டுள்ளது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து தேசத்தை உருவாக்குகின்றன. நாட்டின் நிறுவன சமநிலையை நீங்கள் அழிக்கும்போது, மாநிலங்களுக்கிடையிலான உடன்பாட்டையும் அழிக்கிறீர்கள். எல்லா மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பு இல்லை என்றால், அந்த மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலை அழிக்கப்படும். அது எந்த நாட்டிற்கும் கடுமையான பிரச்சினையாகும். இதைத்தான் நாம் எதிர்கொள்கிறோம். ராஜஸ்தானில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வீசப்பட்ட பணத்தின் அளவு எனக்குத் தெரியும்.
ஒருபுறம், நீங்கள் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளீர்கள், நிதி மற்றும் ஊடகங்களில் ஏகபோகத்தைக் கொண்டுள்ளீர்கள். மறுபுறம் கட்சிகளை உங்களோடு போட்டியிட அனுமதிப்பதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, அவர்கள் அரசை அமைக்கும்போது அது அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது எங்கே செல்கிறது? ஒரு அரசியல் தலைவராக, ஒரு ஜனநாயகத்தில், எனக்கு நிறுவன ஆதரவு, ஊடகம், தீவிரமான நீதித்துறை, பாராளுமன்றத்தில் பேசும் திறன் ஆகியவை தேவை. அவை அனைத்தும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இது எங்கே செல்கிறது? வெகுஜன நடவடிக்கை மூலம் இதைத் தீர்ப்பதற்கு ஒரே ஒருவழி இருக்கிறது. சாதாரண மக்கள், இந்த நாடு அவர்களது ஆணைப்படி அல்ல, பலவந்தத்தால் ஆளப்படுகிறது என அறியும்போது நடவடிக்கையில் இறங்குவார்கள். டெல்லி எல்லையில் அதன் தொடக்கத்தைக் காணலாம்.
தற்போது, இந்தியா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியது போன்ற ஒரு நிலைக்குள், நுழைகிறது. இந்த கட்டத்தில், ஜனநாயகத்தைக் காக்க நிறுவனங்களைச் சார்ந்திருக்க முடியாது. மக்களைத்தான் சார்ந்திருக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை கேள்வி கேட்கும், சவால் விடும் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நான் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னை அச்சுறுத்த அவர்களிடம் எதுவுமில்லை. ஏனென்றால் எனது முழு அரசியல் வாழ்க்கையிலும், ஒரு நேர்மையான நபராக இருக்க எனக்கு நல்ல புத்தி இருந்தது. அதனால், அவர்களால் என்னைத் தொட முடியாது. அதனால்தான் நான் உங்களிடம் பேச முடியும், ஏனெனில் எந்த அமலாக்கத்துறையும், சிபிஐயும் என்னை பாதிக்காது. அதனால்தான் பாஜக என்னை 24*7 தாக்குகிறது. ஏனென்றால் இந்த மனிதன் ஊழலற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். சி.ஏ.ஏ. பாரபட்சமானது என்று நாங்கள் கருதுகிறோம், நாங்கள் அதை ஏற்கவில்லை, நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. இந்த நாட்டில் மதச்சார்பின்மை மீது முழு அளவிலான தாக்குதல் உள்ளது, ஆர்.எஸ்.எஸ் & பாஜக அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குகின்றன. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடித்தளமாகும், எனவே இது நமது கலாச்சாரம் மற்றும் வரலாறு மீதான தாக்குதலாகும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.