பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு எதிராகக் கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா என்பவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுபம் வர்மா அமர்வில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆஜராகி விளக்கமளித்தார். அதன்பிறகு அங்கிருந்து லக்னோ திரும்பும் வழியில் விதாயக் நகரில் இருக்கும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்கு திடீரெனச் சென்று அதிர்ச்சியளித்தார். பின்பு, செருப்பு தைக்கும் தொழிலாளியின் குடும்பம், தொழில், தேவை, பிரச்சனைகள் குறித்துக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.
இதுகுறித்து பேசிய தொழிலாளி, ராகுலை நான் டிவியில்தான் பார்த்திருக்கிறேன்; அவர் எனது கடைக்கு வந்து சுமார் அரைமணி நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றவர், தான் வாங்கி கொடுத்த குளிர்பானத்தை ராகுல்காந்தி குடித்ததாகவும், தனது தொழிலுக்கு அவர் உதவி செய்வதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.