நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது. பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நேற்று பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான பட்டியலில் விருதுநகர் - ராதிகா சரத்குமார், தஞ்சை - எம். முருகானந்தம், வடசென்னை - பால் கனகராஜ், நாமக்கல் - கே.பி. ராமலிங்கம், திருப்பூர் - ஏ.பி. முருகானந்தம், நாகை-ரமேஷ், மதுரை - ராம ஸ்ரீனிவாசன், பொள்ளாச்சி - வசந்தராஜ், சிதம்பரம்-கார்த்தியாயினி, கரூர் - செந்தில்நாதன், திருவள்ளூர் - பாலகணபதி, திருவண்ணாமலை - அஸ்வத்தாமன், தென்காசி - ஜான்பாண்டியன், சிவகங்கை - தேவநாதன்.
புதுச்சேரியில் அமைச்சராக உள்ள நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் நந்தினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு தஞ்சம் புகுந்த விஜயதரணிக்கு தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.