
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த புதிய கல்விக் கொள்கை குறித்தான விவாதங்கள் தமிழகத்தில் உருவாகி இருக்கும் நிலையில், தமிழக அரசு இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் தொடரும் எனத் தீர்க்கமான முடிவினை எடுத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக படிக்க விருப்பமா என்ற கேள்வி அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்.
அண்மையில் கோவை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ஹிந்தியை மூன்றாவது மொழியாகப் படிக்க எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாய்க் கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இந்தக் கேள்வி இடம்பெற்றிருந்தது. இதனால் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறதா என்ற ஐயம் எழுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகதினர் விண்ணப்பப் படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார், ஹிந்தி படிக்க விருப்பமா என்ற கேள்வி மாணவர் சேர்க்கைப் படிவத்தில் இடம்பெறவில்லை. இது ஏதோ சில விஷமிகள் செய்த போலி விண்ணப்பம் இணையத்தில் உலாவியுள்ளது. இந்தப் போலியான ஃபார்மெட்டில் மாநகராட்சிக்கு ஒரு கெட்ட பெயர் ஏற்படுவதற்காகச் சிலபேர் தவறான முறையில் உள்நோக்கத்தோடு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.