தமிழகஅரசு திருவையாறு அருகில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள வல்லுநர்குழுவினர் ஆய்வுசெய்தனர். அவர்களிடம் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே மனுக்களை கொடுத்து அரசுக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசுத் திட்டமிட்டு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, ஆற்றில் குடியேறுதல், அரசு அதிகாரிகளை சிறைப்பிடித்தல், மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்தல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அதோடு இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடுத்தனர்.
அந்த வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி, நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கணபதி சுப்பிரமணியன், விலங்கியல் பேராசிரியர் புகழேந்தி உள்ளிடோர் கொண்ட குழுவினர் விளாங்குடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தனர்.
இதை தெரிந்துகொண்ட அப்பகுதிமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர், அதிகாரிகளிடம், ‘’ இங்கு குவாரி அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் மனுக்களை அளித்தனர். அதில் ’’ஐயா இங்கு மணல் குவாரி அமைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும், குடிநீருக்கே தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் ஆடு, மாடுகள் பாதிப்புக்குள்ளாகும், நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலும் பாழாகி பல மடங்கு ஆழத்துக்குச் சென்று விவசாயம் முழுமையாக அழிந்துவிடும். எங்கள் தொகுதியில் உள்ள அமைச்சரான வேளாண்மை துறை அமைச்சரின் சுயநல பணவெறியில் மக்களின் நலனை யோசிக்காமல், சுயநலத்துடன் செயல்படுகிறார். அவர் எங்கள் தொகுதியில் இருப்பதே சாபக்கேடாக நினைக்கிறோம், நாங்கள் அவரை நம்பவில்லை, மாறாக சட்டத்தையும் உங்களையும் நம்பியிருக்கிறோம், எங்களின் அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள் என குறிப்ப்ட்டதோடு விளக்கினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளோ இதைசற்றும் எதிர்ப்பார்த்திடவில்லை, இனிஎன்ன செய்வது என்கிற அடுத்தக்கட்டயோசனையில் இருக்கிறது அரசு. ஆய்வுகுழுவோ இங்கு நடந்ததை அப்படியே மேலே சமர்ப்பிப்பேன் என குறிப்பிட்டுள்ளது.