கிராமங்களில், விவசாயக் குடும்பத்தில் எல்லா வீடுகளிலும் ஆடு, மாடுகள் வளர்க்கப்பட்டு வருவது வழக்கம். அதிலும் வெள்ளாடுகளே அதிகம் வளர்க்கப்படும். செம்மறி ஆடுகள் ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே ஈனும். ஆனால், வெள்ளாடுகள் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ள வெள்ளாட்டை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி பழனியப்பன், தன் வீட்டில் குடும்பச் செலவுகளுக்காக வெள்ளாடுகளும் வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆடு, நேற்று குட்டிகள் ஈன்றது. முதலில் 2 குட்டிகள் வரை ஈன்றதும் அவ்வளவுதான் என்று ஈன்ற குட்டிகளை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அடுத்த அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 4 குட்டிகளை ஈன்றது அந்த ஆடு.
இதுவரை 2 குட்டிகள் வரை ஈன்ற ஆடு, இந்த முறை 6 குட்டிகளை ஈன்றது மகிழ்ச்சியாக உள்ளதாக பழனியப்பன் குடும்பத்தினர் கூறுகின்றனர். இதில் 4 பெண்குட்டிகளும் 2 ஆண்குட்டிகளும் என அனைத்து ஆட்டுக்குட்டிகளும் ஆரோக்கியமாகவே உள்ளன. இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் பலரும் அங்கு வந்து ஆட்டையும் 6 குட்டிகளையும் பார்த்து வருகின்றனர்.