அண்மையில் சென்னையில் ஒரே இரவில் தேனாம்பேட்டையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சுமார் 9 இடங்களில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இதேபோல் மதுரையில் பட்டப் பகலில் மங்கி குல்லா அணிந்து கொண்டு இருவர் பட்டாக்கத்தியைக் காட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மங்கி குல்லா அணிந்து கொண்டு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பட்டப் பகலில் பட்டாக்கத்தியைக் காட்டி கண்ணில் சிக்கியவர்களிடம் வழிப் பறியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலையில் புதூர் அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் சென்ற ஒரு பெண்ணை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரும் தனிப்படை அமைத்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரதாப், அதே ஊரைச் சார்ந்த கணேசன் என்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழிப்பறியில் கிடைக்கும் நகைகளை அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபரிடம் கொடுத்து விற்று வந்ததும் தெரிய வந்தது. இந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் வழிப்பறி தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.