Skip to main content

வழக்கை கால தாமதப்படுத்தும் நோக்கம்: தினகரனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
வழக்கை கால தாமதப்படுத்தும் நோக்கம்:
தினகரனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

பெரா வழக்கில் தினகரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இது போன்ற கால தாமதம் செய்யும் நோக்கில் மனு அளித்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

எழும்பூர் கோர்ட்டில் நடந்து வரும் பெரா என்னும் அன்னிய செலாவணி வழக்கை விரைந்து விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் போதிய விசாரணை நடக்கவில்லை என்றும் இதனை விரைந்து முடிக்க கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கடும் கோபமுற்றனர். இதுவரை வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற விதத்தில் மனுக்களை பார்த்துள்ளோம். ஆனால் நேர்மாறாக இந்த மனு எங்களுக்கு வியப்பளிக்கிறது. இந்த மனு மூலம் வழக்கை கால தாமதப்படுத்தும் நோக்கம் நன்றாக தெரிகிறது.

இது போன்ற மனு தவறானது. மனுவை திரும்ப பெறுகிறீர்களா அல்லது அபராதம் விதிக்கட்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது போன்ற வழக்கை தொடர்ந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதனையடுத்து தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தினகரன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக எடுத்து கொள்ளப்பட்டது.

சார்ந்த செய்திகள்