'புரெவி’ புயல் பாம்பனை நெருங்கிவரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மாலை 6 மணிமுதல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், கடற்கரை மற்றும் நீர் நிலைகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'புரெவி’ புயல் எதிரொலியாக நாளை ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பிறகு தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய நிலவரப்படி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இதனால் காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறினார்.