புளுவேல் விளையாடும் மத்திய அரசு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடும் தாக்கு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாள் மற்றும் முரசொலி பவள பிரச்சார கூட்டம் நகர செயலாளர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன்,ச த்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவும், ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைச்செயலாளருமான வி.பி.ராஜன், மத்திய அரசாங்கம் பின்வாசல் வழியாக தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. இது நெடுங்காலம் நீடிக்காது. மாநில கவர்னரை விமர்சிக்க கூடாது என்பார்கள். ஆனால் தமிழக கவர்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவர் கைகளையும் பிடித்து வைத்துவிட்டு செல்கிறார்.
பெரும்பான்மை இல்லை என்று சொன்னால் அது உட்கட்சி பூசல் என்கிறார். சட்டமன்றத்தில் பெருன்பான்மையை நிருபிக்க சொன்னால் சட்டமன்றத்தை கூட்ட மறுக்கிறார்கள். என்ன காரணம். தினகரன் அணியில் உள்ள 18 பேரையும் கொஞ்சம் கொஞ்சமாக விலை கொடுத்து வாங்கி அதன் பிறகு சட்டசபையை கூட்ட நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் புளுவேல் கேம் போல் அனிதாவை கொன்றுவிட்டார்கள். இனி யாரை கொல்வதற்காக காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இனியும் இவர்களது விளையாட்டை தமிழக மக்கள் பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள். விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றார்.
பாலாஜி.