புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டமாக ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காமல் தாமதமான நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி 6ஆம் தேதிக்கு (இன்று) மாற்றப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர். அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சரியான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினால் என்றைக்கு வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் எனக் கூறப்பட்டதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், வாடிவாசல் அருகாமையில் மாடு வெளியேறும் பகுதியிலிருந்து ஒரு மாடு மட்டும் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து மாடுகள் நேற்றே தச்சங்குறிச்சி கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, மாடுகள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மதுரையிலிருந்து போட்டிக்காக அழைத்து வரப்பட்ட மாட்டை அதன் உரிமையாளர், இன்று காலை அவிழ்த்து விட்டுள்ளார். அவ்வளவு தூரத்திலிருந்து வந்து மாட்டை சும்மா அழைத்துச் செல்ல முடியாது என அதன் உரிமையாளரே அவிழ்த்துவிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.