புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் நவம்பர் 16 ந் தேதி கடுமையாக தாக்கிய கஜா புயலால் தென்னை, பலா, தேக்கு போன்ற அனைத்து மரங்களும் உடைந்து முற்றிலும் சேதமடைந்தது. அதே போல பலத்த காற்றின் வேகத்தில் ஓடு மற்றும் கூரை வீடுகளும் சேதமடைந்தது. இந்த நிலையில் சேதமடைந்த வீடுகளை மராமத்து செய்ய உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து நிவாரணத் தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும், மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி கிராமத்தில் புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 57 பேர் 4 முறை விண்ணப்ப மனு கொடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறி கடைவீதியில் உள்ள கிராம சேவை மையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் காத்திருப்பு போராட்டம் பற்றி தகவல் அறிந்து வடகாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சுமார் 25 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் போராட்டம், பொதுமக்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கண்ணீரோடு தங்கள் கோரிக்கைகளை கூறினார்கள். அப்போது புயல் தாக்கி 20 நாட்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்குதான் இதுவரை நிவாரணம் வந்துள்ளது. அதனால் நிவாரணம் கிடைக்காதவர்கள் காலம் கடந்து விண்ணப்பம் கொடுத்தவர்களாக இருக்கும் என்று வருவாய் ஆய்வாளர் கூறினார். ஆனால் ஒவ்வொருவரும் 4 முறை விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம் அதிலும் 10 நாட்களுக்குள் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
மேலும் தற்போது 57 பேருக்கு மட்டும் நிவாரண தொகை கிடைக்கவில்லை. ஆனால் வருவாய் கணக்கில் அதில் 26 பேருக்கு பணம் வழங்கி இருப்பதாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய வடகாடு இன்ஸ்பெக்டர் பாலாஜி.. இதுவரை மனு கொடுத்தது போல தற்போதும் அனைவரும் மனு தயார் செய்து என்னிடம் கொடுங்கள். வருவாய் ஆய்வாளரிடம் நான் கொடுத்து நாளை மாலைக்குள் அந்த மனுக்களுக்கான தீர்வு என்ன என்பதை கேட்டு சொல்கிறேன் என்று கூறியதால் இன்ஸ்பெக்டரிடம் அனைவரும் நிவாரணம் கேட்டு மனு கொடுத்து கலைந்து சென்றனர்.