புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஆயிங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவருக்கும் மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த சுதாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்யப்பட்டு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் திடீரென சுதா வீட்டிற்குள் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். இது குறித்து சுதாவின் தந்தை வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சுதாவின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து சுதாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலிசார் வழக்குப் பதிவு விசாரனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுதாவின் உடலை அவரது சொந்தங்கள், ஆயிங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள குடியிருப்பிற்கு கொண்டு வந்தனர். அங்கே, பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் சுதாவின் சடலத்தை கணவர் ராஜகோபால் வீட்டிற்கு எதிரில் குழிதோண்டி புதைத்துவிட்டனர். அப்போதே ராஜகோபால் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பாதுகாப்பிற்கு நின்ற போலிசார் சொல்லியும் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக் கிழமை மதியம் ராஜகோபால் உறவினர்கள் மற்றும் ஆயிங்குடி வடக்கு கிராமத்தினர் அறந்தாங்கி கோட்டாட்சியர் முருகேசனிடம் குடியிருப்புப் பகுதியில் வீட்டின் எதிரில் புதைக்கப்பட்டுள்ள சடலத்தைத் தோண்டி எடுத்து இடுகாட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
புகாரை வாங்கிய கோட்டாட்சியர் உடனே வருவாய் மற்றும் காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்றபோது சுதாவின் உறவினர்கள் சடலத்தைத் தோண்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு சடலம் தோண்ட ஆள் இல்லாததால் சுதாவின் கணவர் ராஜகோபால் மற்றும் சிலர் தோண்டி சடலத்தை எடுத்தனர். சந்தேக மரணம் என்பதால் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் அதிகாரிகள் முன்னிலையில் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து சுதாவின் பெற்றோர் தரப்பில் கூறும் போது. சுதாவின் இறப்பு தற்கொலை இல்லை. அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும். அதனால் ராஜகோபால் உள்ளிட்ட இதற்கு உடந்தையாக இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், சுதாவின் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சொத்துகளை குழந்தைகள் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே போல ராஜகோபால் உறவினர்கள் கூறும் போது.. சுதாவை யாரும் கொலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகளை முழுமையாக ராஜகோபால் பராமரிப்பார் என்று கூறுகின்றனர். போலிசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். வழக்கு விசாரனையின் முடிவில் இது கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் இது போல பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி வீட்டிற்குள், வீட்டு வாசலில் சடலங்களைப் புதைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தச் சம்பவம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆயிங்குடி வடக்கு கிராமத்தில் மீண்டும் வீட்டின் அருகில் உடலைப் புதைக்கும் சம்பவம் தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..