புதுக்கோட்டையில் பசு மாட்டை திருடி சந்தையில் விற்ற நபரை பிடித்து கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார் சாலையைச் சேர்ந்தவர் மகாதேவன் (23). தனது வீட்டில் பசு மாடு வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு பசுமாட்டிற்கு தண்ணீர் வைத்து வீட்டு வாசலில் கட்டிவிட்டு தூங்கிவிட்டனர்.
திங்கட்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது பசுவை காணவில்லை. அந்தப் பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் சோகமாக அமர்ந்திருந்த மகாதேவனிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், உங்கள் வீட்டில் நின்ற பசுவை சந்தையில் விற்பனை செய்ய ஒருவர் விலை பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல, சந்தைக்கு விரைந்தார் மகாதேவன். தனது பசுமாட்டை பார்த்ததும் பசு அவரிடம் வந்தது.
பசுவை பிடித்திருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது சந்தையில் நின்ற பலரும் அந்த நபரை பிடித்து அந்த பகுதியில் நின்ற கலவை இயந்திரத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, பசுவை திருடி விற்க முயன்றவர் அம்மாபட்டினம் வடக்கு தெரு நூர்முகமது என்பதும் அதேபோல ஊர் ஊராகச் சென்று மாடுகளை திருடிச் சென்று பொழுது விடியும் முன்பே சந்தைகளில் விற்று பணம் வாங்கிச் சென்று வருவதும் தெரிய வந்தது. ஆனால் அறந்தாங்கிலேயே திருடி சில மணி நேரத்திலேயே அறந்தாங்கி சந்தையிலேயே விற்க முயன்ற போது சிக்கிக் கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து நூர்முகமதுவை கைது செய்துள்ளனர்.