புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கொத்தமங்கலம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளைவரை துளைத்துச் சென்றது.
பலநாள் சிகிச்சைக்குப் பின் நேற்று சிறுவன் புகழேந்தி உயிரிழந்தார். இன்று சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே உள்ள பொம்மிடியாமலை, கீரனூர், காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் 10 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவனின் மாமா குமார் கீரனூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீரனூர் போலீசார் 286, 338 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் மீது வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் தமிழக போலீசாரும் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கி மற்றும் தோட்டாவை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.