Skip to main content

அரசு பள்ளிக்கு கணினி முதல் சாக்பீஸ் வரை கல்வி சீராக கொடுத்த கிராம மக்கள்...

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

school

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அந்தந்த கிராம மக்கள் இளைஞர்கள் இணைந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட பல ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கிராம மக்கள் வழங்கினார்கள். தொடர்ந்து கொத்தமங்கலம் சிதம்பர விடுதி அரசு தொடக்கப்பள்ளிக்கு அந்த கிராம மக்கள் பள்ளியில் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து ஆங்கிலம், கணினி பயிற்சிக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்ததுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வேன் வாங்கி கொடுத்ததுடன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் சைக்கிள்களையும் வழங்கி வருகின்றனர். இதே போல பல அரசு பள்ளிகளுக்கும் பெற்றோர்களும், இளைஞர்களும் பள்ளிக்கு தேவையான பொருட்களை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்காமல் கல்விச்சீராக வழங்கி வருகின்றனர்.


அதே கீரமங்கலம் அருகில் உள்ள பெரியார் கிழக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா தலைமையில் கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான கணினி, புரஜெக்டர், மின்விசிறி, பிரிண்டர், இருக்கைகள், யுபிஎஸ், பேப்பர், சாக்பீஸ் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து கல்விச் சீராக வழங்கினார்கள். அனைத்து பொருட்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி பெற்றுக் கொண்டார். விழாவில் உதவி ஆசிரியர் வான்மதி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார்.


இதுகுறித்து கல்வி சீர் கொடுத்த பொதுமக்கள் கூறும்போது... 3 ஆசிரியர்களுடன் செயல்பட்ட பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று ஒரு ஆசிரியரை இடமாற்றம் செய்ய முயன்றனர். அப்போது கிராமத்தினர் கல்வி அதிகாரிகளிடம் வரும் கல்வி ஆண்டில் சேர்க்கையை அதிகரிப்பதாக உறுதி அளித்து ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தினர். அதே போல இந்த கல்வி ஆண்டில் 21 புதிய மாணவர்களை சேர்த்து தற்போது 64 மாணவர்களுடன் பள்ளி செயல்படுகிறது.  புதிய மாணவர்களுக்கு பள்ளி தொடங்கியபோது பள்ளி சார்பில் மாலை அணிவித்து வரவேற்பும் கொடுக்கப்பட்டது. தற்போது எங்கள் குழந்தைகளின் படிப்பை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை கிராம மக்களே இணைந்து கல்வி சீராக வழங்கி இருக்கிறோம். இன்னும் தேவைகள் இருப்பின் அவற்றையும் வழங்க தயாராக இருக்கிறோம். மேலும் வரும் கல்வி ஆண்டில் சேர்க்கையை அதிகரிப்போம் என்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்