பொள்ளாச்சி சம்பவம் நடந்து பல நாட்கள் ஆனாலும் நக்கீரனில் வீடியோ வெளியான பிறகு கடந்த 2 நாட்களாக வேகமாக சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் உயர்த்தும் நேரத்தில் தமிழக அரசு உண்மை குற்றவாளிகளை மறைக்க முயற்சிகள் செய்து வருவதால் மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். காமுக கொடூர குற்றவாளிகளை காப்பாற்றும் அரசுகளை கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தனியார் கல்லூரி மாணவிகள் அமைதியாக வகுப்புகளுக்கு சென்றாலும் அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை வேகமாக பதாகைகளை தயாரித்தனர். தங்கள் எதிர்ப்பை காட்ட எழுதப்பட்ட பதாகைகளுடன் முகத்தை மறைத்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள். பெண்கள் வாழ வழியற்ற நாட்டில் வீணாக எதற்கு ஓட்டு.. உயர் தண்டனை சட்டம் கொண்டு வா.. பாதுகாப்பை உறுதி செய்.. பெண்டீரே விழித்தெழுங்கள்.. உன்னை சிதைப்பவளின் பிறப்புறுப்பை அறுத்தெரியுங்கள்.. எங்கள் ஒட்டு எங்களை காப்பாற்றாத போது.. எங்களுக்கு எதற்கு தேர்தல்.. பெண்கள் வாக்களிக்கப்போவதில்லை.. பெண்கள் வன்கொடுமைக்கு உட்சபட்ச மரண தண்டனையை அமல்படுத்து.. அதுவரை தேர்தலை ரத்து செய்.. என்ற பதாகைகளுடன் வகுப்பறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவிகள்.
இந்த தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்ற போலிசார் யார் போராட்டத்தில் ஈடுபட்டது என்று விபரம் சேகரித்ததுடன் அந்த மாணவிகளின் பெற்றோருடன் நாளை கல்லூரிக்கு வர வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் பெண் வன்கொடுமைக்காக போராடிய மாணவிகளும், கல்லூரி நிர்வாகமும் அச்சத்தில் உள்ளனர்.
வெளியில் வந்து போராடத்தான் தடைவிதிக்கும் போலிசார். தற்போது நான்கு சுவற்றுக்குள் கூட தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு கூட மிரட்டப்படுவது எல்லாவற்றையும் விட கொடுமை. இந்த தகவல் அறிந்து மற்ற கல்லூரி மாணவர்களும் நாள போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள். போராட்டங்களை தூண்டுவது அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தான்.