
கஞ்சா விற்ற அதிமுக ஐடி விங்க் பிரமுகர் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு கை மாற்றிய கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பொற்குடையார் கோயில் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா கைமாற்ற உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தபோது 1.5 கிலோ கஞ்சாவுடன் அறந்தாங்கி எல்.என்.புரம் ராமு மனைவி சகுந்தலா (33), அறந்தாங்கி அதிமுக ஐடி விங்க் களப்பக்காடு மதன் என்கிற மதன்குமார் (30), எல்.என்.புரம் முத்துச்செல்வம் மகன் மணிகண்டன் (26), பச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் மகன் முருகன் (24), அறந்தாங்கி காந்தி நகர் ராமச்சந்திரன் மகன்்மணிமாறன் (19) ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனையில் கைதாகியுள்ள அதிமுக பிரமுகர் மதன் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அறந்தாங்கி நகரில் எல்.என்.புரம், ரயில்வே கேட், கல்லுச்சந்து, களப்பக்காடு மற்றும் திருநாளூர் உள்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டியுள்ள போலீசார் விரைவில் அவர்களையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மீமிசல், கோட்டைப்பட்டிணம், மணமேல்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மொத்தமாக கஞ்சா விற்பனை செய்வோரையும் இலங்கைக்கு கடத்தல் செய்வோர் பற்றிய விவரங்களையும் சேகரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புவரை கடலோரங்களில் மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.