புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 பேர் கொண்ட கும்பல் கையில் பெரிய அரிவாள்கள் மற்றும் கத்தியுடன் ஒரு நபரை வெட்டுவதற்கு விரட்டிச்சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி அரசமரம் பகுதியில் நேற்று பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று யாருடைய வருகைக்காகவோ நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு நபரை அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியுடன் வெட்டுவதற்காக விரட்டியது. அந்த நபர் அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க அங்கிருந்து வடகாடு முக்கம் பஸ் ஸ்டாப் வரை சுமா் 500 மீட்டர் தூரம் ஓடினார். அவரை பின்தொடர்ந்து அந்த கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்றது. அப்போது, அந்த நபர் தான் வைத்திருந்த செல்போனில் யாருக்கோ தகவல் கொடுத்துக் கொண்டே ஓடினார்.
வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசமரம் பஸ் ஸ்டாப் வந்துள்ளார். அப்போது இவரின் நண்பர்கள் கையில், கட்டையுடன் நின்றனர். இதனைக்கண்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதேபோல் மற்றொரு கும்பலும் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் தப்பியோடிய இரு கும்பல்களையும் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிப்பறிகள் ஏராளம் நடந்த நிலையில், தற்போது பட்டப்பகலில் அரிவாளுடன் கடைவீதியில் ஒருவரை விரட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.