Skip to main content

காவல்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கும் காப்பீடு அறிவிக்க வேண்டும் -ஈஸ்வரன் அறிக்கை

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  தூய்மை பணியாளர்களுக்கு மத்திய நிதியமைச்சர் காப்பீட்டுத் தொகை அறிவித்தது போல  கரோனா தடுப்பு பணியில் பங்காற்றும் காவல்துறை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் அறிவிக்க முன்வர வேண்டும் என்று கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.

 

corona virus - police and media insurance issue - kmdk Eswaran speech

 



இது குறித்து அவர், "கரோனா தடுப்பு பணியில் தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது  என்ற மத்திய நிதியமைச்சர் அவர்களின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. ஆனால் இன்னும் ஒருசிலர் கரோனா வைரஸ் தாக்கத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் அரசின் உத்தரவுகளை மீறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. 

இந்த சூழ்நிலையில்  காவல்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் பங்களிப்பு மக்களுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. அரசின் 144 தடை உத்தரவு உட்பட பல உத்தரவுகளை சரிவர மக்கள் அனைவரும் பின்பற்ற காவல்துறையினர் இரவுப்பகலாக உழைத்து வருகின்றனர். காவல்துறையினரின் நடவடிக்கைகள் மூலமாக தான் பெரும்பான்மையான மக்கள் வீட்டை விட்டு பொது இடங்களில் ஒன்று கூடுவதையும், கடைகளில் கூட்டமாக நிற்பதையும் தவிர்த்து வருகிறார்கள். இப்படி அரசின் உத்தரவுகளை மக்கள் கடைபிடிக்க வைப்பதில் காவல்துறையினரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் இருக்கிறது. அதேபோல மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளையும், கரோனா விழிப்புணர்வு செய்திகளையும் மக்களுக்கு ஊடகத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

கரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்களுக்கு சொல்வதில் தொலைக்காட்சிகளும், செய்திதாள்களும் மிக மிக முக்கியமானவை.  கரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளிலிருந்து உள்ளூர் வரை உள்ள அனைத்தையும் ஊடகவியலாளர்கள் மக்களுக்கு தெரியப்படுத்தி மிகுந்த எச்சரிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி  வருகின்றனர். ஊடகத்துறையில் வேலை செய்பவர்கள் தினந்தோறும் செய்திகளை சேகரிக்க  செல்லும் போது எதிர்பாராத விதமாக கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  தூய்மை பணியாளர்களுக்கு மத்திய நிதியமைச்சர் காப்பீட்டுத் தொகை அறிவித்தது போல  கரோனா தடுப்பு பணியில் பங்காற்றும் காவல்துறை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் அறிவிக்க முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்