ரமலான் பண்டிகை இன்று (22.04.2023) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 'எம்மதமும் எம்மதமே' என்ற இலக்கணத்தோடு தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்களும் இஸ்லாமியர்கள் பண்டிகைகளுக்கு இந்து, கிறிஸ்தவர்களும் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வதோடு விருந்து உபசாரங்களிலும் பங்கேற்று சகோதரத்துவத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
இதே போல தான் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட எல்லை கிராமங்களில் பேராவூரணி, ஆவணம், நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவர்கள் தற்போது வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் கூட ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பள்ளி விழாக்களில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
அதே போல இன்று இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பேராவூரணி, ஆவணம் பள்ளிவாசல்களில் தொழுகை நேரத்திற்கு முன்பே சென்ற முன்னாள் மாணவர்கள் சிறப்புத் தொழுகை முடிந்து வெளியே வரும் போது ரமலான் வாழ்த்துகள் கூறி மரக்கன்றுகளை பரிசாக வழங்கி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். இந்த நாளில் கொடுக்கும் ஒவ்வொரு மரக்கன்றுகளையும் ரமலான் நாளை நினைத்து வளர்த்து விடுவார்கள்.a இன்று வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளில் எப்படியும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை வளர்த்து வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் பழமரக்கன்றுகளை அதிகமாக வழங்கி வருகிறோம் என்றனர் முன்னாள் மாணவர்கள்.