புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், மறமடக்கி, மாங்காடு, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் நீர்நிலை சீரமைப்பு பணிகளை அந்தந்த கிராம இளைஞர்களே சொந்த செலவில் தொடங்கி செய்து வருகின்றனர். பல வருடங்களாக மராமத்து செய்யப்படாததால் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சீரமைப்புகளை முழுமையாக செய்து விடுவோம் என்று கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அதேபோல வட்டாட்சியரிடமும் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. அதனால் சில நாட்களாக கனமழை பெய்தும் கூட சீரமைக்கப்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. அதனால பணத்தையும், உழைப்பையும் செலவழித்து சீரமைத்த இளைஞர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள நற்பவளக்குடி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 ஏரிகள், குளங்கள் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆயக்கட்டுதாரர்களே பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை 29 சதவீதம் அளவிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மழை தொடங்கிவிட்டதால் இனிமேல் எப்படி பணிகள் தொடர்ந்து செய்வது என்பது பற்றி ஆலோசனைகளை அதிகாரிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதேபோல் இந்த பணிகள் சரியாக நடைபெற வேண்டும் என்பதால் துறை செயலர் நேரடியாக வந்து பார்வையிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பார்வையிட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது, கொத்தமங்கலம் மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்களே குளங்களில் மராமத்து பணிகளை செய்து வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் சீரமைக்கப்பட்ட குளங்களுக்கு கூட தண்ணீர் வரவில்லை என்ற கேள்விக்கு,
மனு கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். என்றவர் பொதுப்பணித்துறை குளமா? என்று கேட்டுவிட்டு அந்த பகுதிக்கான பொறியாளர் யார் என்று அருகில் அழைத்து ஏன் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட்டுக்கு போவதாக நோட்டீஸ் கொடுப்பதாக சொல்றாங்க.. என்று பொறியாளர் பதிலளித்தார். கோர்ட்டுக்கு போகல, ஸ்டே வாங்கல தானே அப்பறம் என்ன தயக்கம். இதுவரை என்ன பணிகள் நடந்திருக்கு என்ற ஆட்சியர் கேட்க, அது வந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி வருகிறோம் என்றார் பொறியாளர்.
சரி எப்ப முழுமையாக அகற்றி அறிக்கை கொடுப்பீங்க. என்ன ஆக்கிரமிப்பு இருக்கு என்றார் ஆட்சியர். கட்டிடங்கள், விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. அடுத்த வாரம் அகற்றி அறிக்கை தருகிறோம் என்று இழுக்க..ஏன் அவ்வளவு நாள் நாளை மறு நாள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கனும். அது எந்த வட்டம் ஆலங்குடியா? தாசில்தார், போலீஸ் துணைக்கு அழைச்சுட்டு போய் உடனே 2 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை கொடுக்கனும் என்றார்.
அடுத்து மேற்பனைக்காடு பெரிய குளம் குடிமராமத்து பணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரை குளத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு.. அது கல்லணை கோட்டத்தில் வருகிறது. பணிகள் தொடங்கி நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வளவு சீக்கிரம் ஆற்றில் தண்ணீர் வரும் என்பது தெரியவில்லை என்றார். ஆட்சியர் கொடுத்த மனுவை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்ட தகவல் பரவியதும், இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிரடி உத்தரவிட்ட ஆட்சியருக்கு இளைஞர்கள் நன்றி கூறினார்கள்.