ஆத்தூர் அருகே வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் திட்டத்துடன் விவசாயியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (74), விவசாயி. இவருக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார் சுப்ரமணி. இந்நிலையில், தனது நிலத்தை ஆத்தூரைச் சேர்ந்த சாராய வியாபாரியான பெருமாள் (55) என்பவருக்கு, கடந்த மார்ச் மாதம் 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக அப்போது பெருமாள், முன்பணமாக 10 லட்சம் ரூபாயை சுப்ரமணிக்கு கொடுத்து, நிலத்தை தன் பெயரில் ஒப்பந்தம் செய்துகொண்டார். சில நாட்களில் எஞ்சியுள்ள முழு தொகையையும் செட்டில்மெண்ட் செய்து விடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த வியாபாரம் முடிந்த சில நாட்கள் கழித்து, அதாவது கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி சுப்ரமணி திடீரென்று மாயமானார். அவருடைய விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், நிலத்தை விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்டதில் சுப்ரமணிக்கும், பெருமாளுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அவர் மாயமானதில் சந்தேகம் இருப்பதாகவும் நாமகிரிப்பேட்டையில் வசித்துவரும் சுப்ரமணியின் தம்பி மகள் கனகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனது பெரியப்பாவைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் கனகம், ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்துவந்த நாகிரிப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர், பின்னர் சம்பவ இடம் ஆத்தூர் சரகத்திற்கு உட்பட்டது என்பதால், வழக்கு விசாரணையை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். ஆத்தூர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், விவசாயி சுப்ரமணி காணாமல் போகவில்லை; அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவருடைய நிலத்தை விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்ட பெருமாள்தான் இந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. சுப்ரமணிக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், அவருடைய நிலத்தை மேற்கொண்டு பணமே கொடுக்காமல் மொத்தமாக வளைத்துப் போட்டுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் பெருமாள். தனது திட்டத்திற்கு உதவும்படி, அவருடைய கூட்டாளிகளான ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல், தினேஷ், முஸ்தபா ஆகியோரிடம் கேட்டுள்ளார். காதும் காதும் வைத்தமாதிரி காரியத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட அவர்கள், பெருமாளுடன் கூட்டு சேர்ந்து கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று சுப்ரமணியை, சிவங்காபுரம் சக்திவேலுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்குப் பலவந்தமாக தூக்கிச்சென்று கை, கால்களைக் கட்டிப்போட்டு மிரட்டியுள்ளனர். நிலத்திற்கு முழு தொகையும் கொடுத்துவிட்டதுபோல முத்திரைத்தாளில் எழுதி, அதில் கையெழுத்துப் போடுமாறு மிரட்டியுள்ளனர்.
இந்த மிரட்டலுக்கு சுப்ரமணி மசியாததால், அவரைக் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை, சக்திவேலின் தோட்டத்து நிலத்தில் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் அவரவர் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுவந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரும் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பல இடங்களில் தோண்டிப் பார்த்தும் சடலம் மட்டும் கிடைக்கவில்லை.
தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், தினேஷ், முஸ்தபா ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ரங்கராஜன் முன்னிலையில் தினேஷும், ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் முன்னிலையில் முஸ்தபாவும் சரணடைந்தனர். சம்பவ இடத்திற்கு முஸ்தபாவை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர் கைகாட்டிய இடங்களில் எல்லாம் தோண்டிப் பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை. இதனால் காவல்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், காவல்துறைக்குப் போக்குக் காட்டிவந்த சாராய வியாபாரி பெருமாள், சக்திவேல் ஆகிய இருவரையும் டிச. 5ஆம் தேதி இரவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் காவல்துறையில் அளித்துள்ள பகீர் வாக்குமூலம் வருமாறு:
“சுப்ரமணி கொலை வழக்கில் ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரும் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டதால், எப்படியும் அவர்கள் எங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என பயந்தோம். சடலம் கிடைத்துவிட்டால் நிச்சயமாக நாங்கள் தப்பிக்க முடியாது என்பதால், ராமதாஸும் அறிவழகனும் பிடிபட்ட அன்று, இரவோடு இரவாக சக்திவேலின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சுப்ரமணியின் சடலத்தைத் தோண்டி எடுத்தோம். அப்போது சடலம் முற்றிலும் சிதைந்து வெறும் உடைந்த எலும்புத் துண்டுகள்தான் கிடைத்தன. அவற்றை எல்லாம் சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச்சென்று, ராமநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் வீசிவிட்டோம். அழுகிப்போன சதைகளும் கொஞ்சம் கிடைத்தன. அவற்றை சக்திவேலுக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டோம். நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டிருந்த நிலையில், எங்களைக் காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.” இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கூறியபடி வசிஷ்ட நதியில் சுப்ரமணியின் எலும்புத்துண்டுகள் கிடைக்கிறதா என காவல்துறையினர் தேடிப்பார்த்தனர். நதியோரமாக கரை ஒதுங்கிய ஒரு சாக்குமூட்டையைப் பிரித்து பார்த்தபோது ஏராளமான எலும்புகள் துண்டுத் துண்டாகக் கிடப்பது தெரியவந்தது. எனினும், கொல்லப்பட்ட நபரின் மண்டை ஓடு மட்டும் கிடைக்கவில்லை. சேகரிக்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு, அந்த இடத்திலேயே சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சட்டம் சார்ந்த மருத்துவர் கோகுலகண்ணன் தலைமையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
சுப்ரமணியின் மண்டை ஓடு கிடைக்காததால், கைப்பற்றப்பட்ட எலும்புத் துண்டுகள் அவருடையதுதானா என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சில எலும்புத்துண்டுகள் மரபணு பரிசோதனைக்காக புனேயில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட விவசாயி, கொலை செய்யப்பட்டார் என்பதையும், கொலையாளிகளையும் காவல்துறையினர் திறம்பட துப்புதுலக்கியுள்ளனர். ஆளில்லா சொத்துக்காக நடந்த இந்தக் கொலை சம்பவம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.