தமிழர்களின் விழாக்கள் அத்தனையும் அர்த்தமுள்ள விழாக்களாகத் தான் இருக்கும். ஆடி மாதம் என்றாலே கிராமங்களில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை குலதெய்வங்களாக வழிபடும் மரபு இன்றளவும், தமிழக கிராமங்களில் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குல தெய்வமாக உள்ள இயற்கை காடுகளில் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள். அப்படி ஒரு விழா தான் முளைப்பாரித் திருவிழா. முந்தைய காலங்களில் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் வீரியத்தையும் தரத்தையும் அறிய விதைப்புக்கு முன்பே சோதனை செய்வது வழக்கம்.
அப்படி கிராமத்தில் உள்ள அத்தனை விவசாயிகளும் தங்களிடம் உள்ள விதைகளை மண் சட்டிகளில் தூவி நிழலில் வளர்த்து, அதன் வீரியத்தை அறிவார்கள். அப்படி முளைத்து வளர்ந்த பயிர்களை ஆட்டம், பாட்டம், கும்மி, கோலாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று கிராம காவல் தெய்வங்களுக்கு படைத்து வழிபாடுகள் செய்த பிறகே விதைப்புகளை செய்வார்கள். முளைப்பாரியுடன் பெண்கள் செல்லும் போது அதில் நல்ல விதை யார் வீட்டில் உள்ளது என்பதை அந்த பயிர்களை வைத்தே கண்டுபிடித்து விதை வாங்கிக் கொள்வார்கள். இயற்கையாகவே விதை நேர்த்தி செய்வதே முளைப்பாரித் திருவிழாகள். அந்த விழாக்கள் இன்றும் கிராமங்களில் தொடர்கிறது.
இந்த விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாவட்டத்தின் பெரிய கிராமமான கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் இணைந்து முளைப்பாரித் திருவிழா நடத்தினார்கள். 10 நாட்களுக்கு முன்பே விதை தூவி வீடுகளில் வளர்த்து வந்த முளைப்பாரிக்கு தினசரி இரவு பெண்கள் ஒரு இடத்தில் வைத்து கும்மியடித்து கொண்டாடினார்கள். இந்த நிலையில் இன்று கிராமத்தில் உள்ள அத்தனை முளைப்பாரிகளும் ஒன்றாக திரண்டு மண்ணடித் திடலில் இணைந்து கும்மியடித்து ஊவலமாக சென்று பிடாரி அம்மன் கோயிலை சுற்றி குளத்தில் விட்டுச் சென்றனர். ஆயிரக்கணக்காண பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றது காண்போரை கவர்ந்தது.