அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு கடந்த 2 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும், பிரதமர் மோடியும் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுகவை தங்களது எடுபுடிகளாக்கி மறைமுகமாக தங்களது காவி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அப்படி ஆட்சி செய்தாலும் தமிழக ஆட்சியை மறைமுகமாக இயக்கப்படுவதை விட நாமே நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்கிற திட்டமிடுதலில் பாஜக இறங்கி அதற்கான வேலை திட்டங்களை தயாரித்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவை இயக்கும் இந்து இயக்க முக்கிய பிரமுகர் ஒருவர் நம்மிடம், தமிழகத்தில் ஆட்சியை உடனே பிடிக்க வேண்டும் என்பதல்ல எங்களது நோக்கம். திராவிடத்தை விரட்டுவது அவ்வளவு எளிமையான காரியமல்ல என்பதும் எங்களுக்கு தெரியும். அதற்கான பணிகளை தான் துவங்கியுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை தமிழகத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கு முன்பு சில திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
அதாவது, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்தால் தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் எங்களை கொண்டாடுவார்கள். இதன் மூலம் திராவிட கட்சிகளுக்கு எதிராக தேர்தல் களத்தில் அவர்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.
அதேபோல், விவசாயிகளை கவர விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என அறிவிக்கவுள்ளோம். வேறு பல மாநிலங்களில் அதை செய்துள்ளதால் எங்களை விவசாயிகள் நம்புவார்கள். இளைய சமுதாயத்தினரை கவர இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கவுள்ளோம். அதோடு, இலவச மொபைல் டேட்டா வழங்குவது, பெண்களை கவர வீட்டுக்கு ஒரு ஃபிரிஜ் என்கிற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி அனைத்து தரப்பினரையும் கவர ஒவ்வொரு விதமான திட்டங்களை வைத்துள்ளோம். அவையெல்லாம் தேர்தல் நெருக்கத்தில் செய்யவுள்ளது.
இப்படிப்பட்ட அறிவிப்புகள் தான் தோல்வி நிலையில் இருந்த எங்களை கர்நாடகாவில் 100 இடங்களில் வெற்றி பெறவைத்து வெற்றி கோட்டுக்கு அருகில் நிற்க வைத்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் இலவசங்கள், தள்ளுபடிகள் தான் கடந்த 3 தேர்தல்களாக வெற்றியை தீர்மானிக்கின்றன. அதனாலயே நாங்கள் அந்த பாதையை தேர்வு செய்துள்ளோம்.
உடனடியாக நாங்கள் செய்யப்போவது, பிரதமர் மோடியின் சாதனைகளை மக்கள் மத்தியில் பரப்பும் விதமாக செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்யவுள்ளோம், அதோடு கள விளம்பரத்துக்காக புதிய புதிய திட்டங்களை வைத்துள்ளோம். அதை புதிய வடிவில் செயல்படுத்தவுள்ளோம்.
இவைகள் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தில் பாஜக பெரும் தாக்கம் செலுத்தும். இந்த தாக்கமே மற்ற கட்சிகளை எங்களோடு கூட்டணி வைக்க வைக்கும். இதன் மூலம் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லையென்றாலும், ஆட்சியை தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம். அது அப்படியே அடுத்தடுத்த தேர்தலில் செயல்படுத்தி, நாங்கள் கட்சியை வளர்த்து, தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்றார்.
ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சியைப்பிடிக்க 1500 கோடி ரூபாய்க்கு திட்டமிடப்பட்டுள்ளது என ஆந்திராவை சேர்ந்த ஒரு நடிகர் பாஜகவின் திட்டமிடலை வெளிப்படுத்தினார். இந்துத்துவா பிரமுகர் நம்மிடம் சொல்வதும் அதை ஒட்டியேவுள்ளன. கோடிகளை கொட்டி, இலவச திட்டங்களை அலப்பறையாக அறிவித்து ஆட்சியை பிடிக்க திட்டமிடுகிறது பாஜக. என்ன செய்யப்போகிறது ஆண்ட, ஆளும் கட்சிகள்?.
Published on 08/06/2018 | Edited on 08/06/2018