தமிழ்நாட்டில் சங்ககால கோட்டை சுவர் கொத்தளத்துடன் எஞ்சியுள்ள ஒரே இடம் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டைதான். இங்கு கோட்டையின் நான்கு வாசலிலும் உள்ள கோயில்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கிடா வெட்டி விருந்து கொடுப்பது, வளையல்கள், மணிகள் காணிக்கை என்று தினம் தினம் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏராளம்.
1.6 கி.மீ. சுற்றளவுள்ள கோட்டையைச் சுற்றி ஆயுத தொழிற்சாலைகள் இருந்ததற்கான இரும்பு உருக்கு கழிவுகளும் சென்னாக்கு குழிகளும் உள்ளன. கோட்டையின் உள்ளே நீர்வாவி குளத்தில் ஆடு, மாடுகளைத் திருட வந்தவர்களிடம் போரிட்டு மடிந்த கனம்குமரன் என்ற வீரனின் நினைவாக நடப்பட்டிருந்த தமிழி கல்வெட்டுடன் கல்லும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தக் கோட்டைக்குள் உள்ள தொன்மைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக அகழாய்வு செய்யச் கோரி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நீதிமன்றத்தை நாடிய நிலையில் தற்போது சென்னை திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இனியனை இயக்குநராகக் கொண்டு அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த தகவல் கிராம மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில்தான் கோட்டையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடும் வெயிலில் வந்து செல்வதால் அவர்களுக்கு நிழல் கொடுக்க நினைத்த பொற்பனைக்கோட்டை நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் இளைஞர்கள், ஊருக்குள் செல்லும் சாலை ஓரங்களில் ஆயிரம் மரக்கன்றுகளை தங்கள் சொந்த செலவில் நட்டு தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"பொற்பனைக்கோட்டையின் பெயரும் புகழும் தெரிந்த ஆயிரக்கணக்கான வெளியூர் மக்கள் வருகிறார்கள். அவர்கள் வரும் வழி எங்கும் மரங்கள் இன்றி கடும் வெயிலில் குழந்தைகளுடன் அவதிப்படுகிறார்கள். அதனால்தான் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுகிறோம்" என்றனர் அம்மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.