புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கணித கண்காட்சி: சிறந்த 9 படைப்புகள் தேர்வு
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று 6ந்தேதி (புதன்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எம்.தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் ச.செந்திவேல்முருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டக்கலெக்டர் சு.கணேஷ் கலந்துகொண்டு கண்காட்சிக்கு தலைமை தாங்கி கண்காட்சியினை திறந்து வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களின் சிறந்த படைப்புகளை பாராட்டினார்.
மாவட்ட அளவிலான இந்த அறிவியல் கணித கண்காட்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் சிறந்த படைப்புகளாக தேர்வுசெய்யப்பட்ட 10 படைப்புகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 10 படைப்புகளும்இடம் பெற்றிருந்தது. இதில் சிறந்த படைப்புகளாக அறிவியலில் 1 மாணவர் 1காட்சிப்பொருள் பிரிவில் மலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் செய்திருந்த விபத்து பற்றிய அறிவிப்பான் என்ற படைப்பும், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் செய்திருந்த காற்றில் உள்ள கார்பன் துகள்களை பிரித்தெடுத்தல் என்ற படைப்பும், குளத்துநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்செய்திருந்த தலைக்கவசம் இன்றி இயங்கா வாகனம் என்ற படைப்பும் ஆகிய 3 சிறந்த படைப்புகளும், 2 மாணவர் 1 காட்சிப்பொருள் பிரிவில் பாதரக்குடி ஆர்.சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த தூய்மை இந்திய கிராமம் என்ற படைப்பும், நெடுவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல் என்ற படைப்பும், அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த உயிரி பிளாஸ்டிக் என்ற படைப்பும் ஆகிய 3 சிறந்த படைப்புகளும், கணிதத்தில் ஆசிரியர் காட்சிப்பிரிவில் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செய்திருந்த நெகிழிக்கற்கல் என்ற படைப்பும், தாந்தாணி அரசினர் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செய்திருந்த சைக்கிள்கொண்டு தொலைபேசியில் மின்னேற்றம் செய்தல் என்ற படைப்பும், கணிதத்தில் மாணவர்கள் காட்சிப்பிரிவில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த மாயச்சதுரங்கள் ஆகிய 3 சிறந்த படைப்புகளும் ஆக மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கணித கண்காட்சியில் ஆக மொத்தம் 9 சிறந்த படைப்புகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் ஜி.முருகன், ஜி.ஆனந்தராஜு, எம்.ராஜ்குமார் ஆகியோரைக்கொண்ட நடுவர்குழுவினர் தேர்வு செய்தனர். இந்த 9 சிறந்த படைப்புகளும் மாநில அளவிலான அறிவியல் கணித கண்காட்சிக்கு அனுப்பப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து சிறந்த படைப்புகளை படைத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசும், பாராட்டுச்சான்றிதழும், வழங்கப்பட்டது. இந்த அறிவியல் கணித கண்காட்சியில் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ஆர்.சந்தியா, புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலைக்கல்வி சு.சின்னப்பன், இடைநிலைக்கல்வி ஆர்.கபிலன், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஏ.இராபர்ட்தனராஜ், மாவட்ட தேர்வுத்திட்ட அமைப்பாளர் கே.திராவிடச்செல்வம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் வி.ஆர். ஜெயராமன் நன்றி கூறினார்.
-இரா.பகத்சிங்