புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாண போராட்டம் நடத்துவோம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு முறையாக வழங்காததை கண்டித்து அறந்தாங்கி ச.ம.உ (தினகரன் அணி) ரெத்தினசபாபதி தலைமையில் நடந்தது. இதற்காண ஏற்பாடுகளை அ.தி.மு.க தினகரன் அணி புதிய மா.செ பரணி கார்த்திகேயன் செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக டெல்லி போராட்டத்தில் இருந்த அய்யாக்கண்ணு குழு வினர் மண்டை ஓடு எழும்புகூடுகளுடன் வந்து கோவனத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய அய்யாக்கண்ணு.. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 141 நாட்களாக டெல்லியில் போராடிவருகிறோம் மோடி கண்டு கொள்ளவே இல்லை. அதனால் நவம்பர் 20 ந் தேதி முதல் 3 நாட்களுக்கு பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகள் வருகிறார்கள்.
எங்கள் போராட்டக் களத்திற்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். விவசாய கடன் ரத்து தொடர்பான வழக்கில் மேல்முறையீடு போகமாட்டோம் என்று சொன்னவர் மேல்முறையிீடு சென்றுள்ளார்.
பயிர்காப்பீடாக விவசாயிகளிடம் 9 ஆயிரம் கோடி வசூல் செய்துவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வெறும் 2250 கோடி மட்டும் கொடுக்கிறது. அதற்காண போராட்டம் இது. இனியும் வழங்கவில்லை என்றால் 15 நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வான போராட்டம் நடத்துவோம். காப்பீடு கிடைக்கும் வரை அங்கேயே படுத்து கொள்வோம் என்றார்.
அதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய மா.செ பரணி கார்த்திகேயன்.. விவசாயிகளுக்காண போராட்டம் நடத்தக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அதை இந்த மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்து வருகிறார். அதனால் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ விசாரனை வேண்டும் என்று ஊழல் வழக்கு தொடர்கிறேன். அதற்காக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வருகிறார்கள் என்றார்.
ரெத்தினசபாபதி ச.ம.உ.. மக்கள் பிரச்சனைக்காக அமைச்சர்களிடம் போய் கேட்டும் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் தான் இப்படி போராட வேண்டியுள்ளது. மக்கள் பிரச்சனைக்காக அமைச்சர்கள் யாரும் டெல்லி போகவில்லை அவர்களை காப்பாற்றிக் கொள்ளவே டெல்லி போனார்கள் என்றார்.
-இரா.பகத்சிங்