Skip to main content

மகளைக் கொன்று சிறைக்குச் சென்ற தந்தை... மர்மமாக இறந்த தாய்... ஆதரவற்று நின்ற பெண்குழந்தைகள்... ஆதரவு கரம் நீட்டிய போலீஸார்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

pudukkotai district police childrens foods and accommodation arranged


புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்குச் சென்ற நிலையில் அவரது தந்தை பன்னீர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மூக்காயி, அவர்களின் உறவினர் குமார் ஆகியோர் சிறுமியைக் கொன்று விட்டு நாடகமாடியுள்ளனர். 

 

அவர்களின் நாடகத்தை அறிந்த போலீஸார் பன்னீர் மற்றும் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது நரபலிக்கான தடயங்களும், சம்பவங்களும் இல்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும் இன்னும் நரபலியாகவே சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் தான் பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி அருகே உள்ள வடுதாவயலில் தனது இரு பெண் குழந்தைகளுடன் தங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் 30- ஆம் தேதி மர்மமான நிலையில் இறந்ததால் அவரின் 2 பெண்குழந்தைகள் மூக்காயின் வயதான அம்மாவின் அரவணைப்பில் இருந்து வந்தனர். 

 

மகளும் இறந்துவிட்டாள், மருமகனும் சிறையில் இருக்கும் நிலையில் தன் அரவணைப்பில் இருந்த 2 பேரக் குழந்தைகளான பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு, வாழ்வாதாரம் இல்லாமல் தானும், குழந்தைகளும் உணவில்லாமல் வாழ வழியின்றி மூதாட்டி மற்றும் குழந்தைகள் கஷ்டப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். 

 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி காவலர்களுடன் வடுதாவயல் கிராமத்திற்குச் சென்று வயதான பாட்டிக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியதுடன் தந்தையும், தாயும் செய்த தவறால் ஆதரவும், உணவும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தக் குழந்தைகளை அழைத்து வந்த போலீஸார் சமூக நலத்துறை கண்காணிப்பில் இயங்கும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் படிப்பிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

 

போலீஸாரின் செயலைப் பார்த்த பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் மற்றும் தாயுள்ளத்தோடு அழைத்து வந்து காப்பகத்தில் சேர்த்த போலீஸாரையும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்