“இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் 15 ஆயிரம் புதிய வாக்காளர்களை எதிர்பார்க்கிறோம், ஜனவரி 25 ஆம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்பாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சிவராசு, கடந்த மாதம் 16ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளுக்கான, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் முதற்கட்டமாக கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இந்த சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் இது வரை, 64 ஆயிரத்து 785 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 63 ஆயிரத்து 201 மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 61,018 படிவம் ஒப்புதல் பெறப்பட்டு, 58,123 படிவங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,895 படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 96% மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில், மன்னார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்கு சாவடிகளை, சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளுக்கான மேற்பார்வையாளர் சஜன்சிங் சவான் நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் உதவி செய்து வருகிறார்கள். அறிவிக்கப்பட்ட அத்தாட்சி நகல்கள் ஏதேனும் ஒன்று இருந்தால் மட்டுமே மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 2020 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வாக்காளர் பட்டியலில் 72% வாக்காளர்கள் இருக்க வேண்டும். 71% வாக்காளர்கள் இருந்தால் நல்லது. என்றாலும், திருச்சி மாவட்டத்தில் 72% வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் வாக்களர்கள் பட்டியலில் குளறுபடிகள் இல்லை. 90 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இருக்க வேண்டும். தற்போது, 45 ஆயிரம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 28 ஆயிரம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது நடைபெறும் இரண்டாம் கட்ட முகாமில் 15 ஆயிரம் புதிய வாக்காளர்களை எதிர்பார்க்கிறோம். இது நிறைவடைந்தால் புதிய வாக்காளர் பட்டியலில், 90% புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்ப படிவம் அளித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின், வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” என தெரிவித்தார்.