கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாத்திமா ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது நாராயணசாமி கூறியதாவது:-
"புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க எம்.பி கனிமொழி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து முறையிட்டோம். அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து புதுச்சேரிக்கு தெரிவித்துள்ளார்கள். எங்களுடைய தனி மாநில கோரிக்கைக்கு முக்கியமான காரணம். புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைப்பதில்லை. அடுத்து முறையான அதிகாரம் இருந்தும் யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுச்சேரி மாநிலத்திற்கு, நிலம், நிதி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, சம்பந்தமாக டெல்லியை விட எங்களுக்கு அதிக அதிகாரம் உண்டு. ஆனால் துணைநிலை ஆளுநர் ஒருவரை நியமித்து, எங்களுடைய மாநிலத்துக்கு முறையாக மக்களுக்கு செய்ய வேண்டிய நல்வாழ்வுத் திட்டங்களை, நலத்திட்டங்களை முடக்குகின்ற வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதாலாவோ, என்னவோ இதுபோன்ற வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் முறியடித்து, மக்கள் நலத்திட்டங்களை படிப்படியாக நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமைைையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. அதற்காகத்தான் மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்கிறோம். கோரிக்கையை முன்வைத்து பேசும்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நியாயமான கோரிக்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் பிரதமரை சந்திக்க தேதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவரையும் சந்திக்க உள்ளோம்.
கண்டிப்பாக இப்போது இல்லை என்றாலும் 2019-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையப்போகிறது. அப்பொழுது கண்டிப்பாக தனி மாநில அந்தஸ்து பெறுவோம்" என்றார்.
புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தவர்.