Skip to main content

பாதியில் ரத்தான திட்டக்குழு கூட்டம்! கிரண்பேடியும், நாராயணசாமியும் சராமாரி குற்றச்சாற்று!

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

புதுச்சேரி மாநிலத்திற்கான 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தற்போதுள்ள நிதி ஆதாரம், துறை வாரியாக பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம்,  திட்டக்குழுவின் தலைவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில்  நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

 Puducherry Planning Committee meeting canceled


கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோதே, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ திட்டக்குழு கூட்டத்திற்கு அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த  சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்க வேண்டுமென துணைநிலை ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பபட்டது. ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அந்த கோப்புகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை. எனவே சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைக்காததை கண்டித்தும், அவர்களை  அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்.

நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, என்னுடைய தரப்பு நியாயத்தையும் ஊடகத்திடம் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார். உடனே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து முதலமைச்சரும், அமைச்சர்களும் சென்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி,”  திட்டக்குழு கூட்டத்தில் விதிமுறைகள்படி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இன்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டுமென்ற கோப்பு என்னிடம் வந்தது. நான் அந்த கோப்பை தலைமை செயலாளர் மற்றும் திட்டக்குழு செயலாளருக்கு அனுப்பிவிட்டேன். அவர்கள் அந்த கோப்பை பார்க்கைவில்லை” என அதிகாரிகள் மீது குற்றம் சாற்றினார். மேலும் “ அடுத்த வாரம் சனிக்கிழமை விதிமுறைகளின்படி மீண்டும் திட்டக்குழு கூட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்