புதுச்சேரி - விமான சேவை தொடங்கியது
புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடி விமான சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று புதுவையில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி விமான சேவையைத் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் 'உதான்' திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாகப் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு, விமான சேவை தொடங்கியது. முதல் விமானம் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் நகருக்குப் பறந்து சென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான சேவை நிறுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிட்டது. இதனால் விமான சேவை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது புதுச்சேரி - ஹைதராபாத், புதுச்சேரி - விஜயவாடா இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்குகிறது. விரைவில் பெங்களூரு, கோவை, கொச்சி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் விமான சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-சுந்தரபாண்டியன்