தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர்.
ரவீந்திரநாத்குமாருக்காக தேனியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக யாரும் வந்ததே இல்லை. இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனியில் தேர்தலுக்குப் பின்னர் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கியபோதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும், அதில் சதி நடக்கிறது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதேபோல் தமிழக தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மந்திரியாகவோ பதவியேற்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர உள்ளதாக கூறியிருக்கிறார்.
ஆண்டிப்பட்டியில் இளங்கோவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தனது வெற்றி குறித்து வரும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று தெரிவித்திருக்கிறார். மேலும் எனக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்று இளங்கோவன் கூறியிருக்கிறார். அப்படி வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.