"கந்தசஷ்டி கவசம் விஷயத்தில் யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் முருகனுக்காகப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் செந்தில்வாசன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதன் தொகுப்பாளர் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இது குறித்து பல்வேறு புகார்கள் எழுப்பிய நிலையில் அவர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்த சூழ்நிலையில் அவரை புதுச்சேரிக்கு வந்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய பாரதிய ஜனதா கட்சியினர் சுரேந்தர் எந்தவித அனுமதியும் இன்றி புதுச்சேரிக்கு வந்தது, கூட்டம் கூட்டியது, முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட புகார்கள் அளித்ததன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரமானது இன்று (24.06.2020) சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இதனைக் கண்டிக்காத முதலமைச்சர் குறித்து பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, "கந்தசஷ்டி கவசம் விஷயத்தில் யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் எல்லா மதத்தினரையும் நேசிப்பவன். இந்து விரோதி இல்லை. அதனால் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவையில் தெரிவித்தார்.