அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு ஆர்வத்தால் வாங்கி வளர்க்கப்பட்ட காளை கொம்பன். புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வனிடம் வளர்ந்து வந்த கொம்பனை துணை முதல்வர் ஒ.பி.எஸ்., ரூ.50 லட்சம் வரை விலைக்கு கேட்டும் கிடைக்கவில்லை.
ஜல்லிக்கட்டு ராசசேகர் ஆள் வைத்து கேட்டார் தமிழ்செல்வன், கொம்பனை கொடுக்கவில்லை. இறங்கிய களமெல்லாம் வெற்றி மாலையுடன் வீட்டுக்கு வரும் கொம்பனை அமைச்சர் விஜயபாஸ்கர் வாங்கி விட்டார். அவரிடம் கொம்பன் வந்த பிறகு அலங்காநல்லூரில் வீரர்களுக்கு அடங்க மறுத்து அதகளமாக சீறிப் பாய்ந்ததும் இதைப் பார்த்த முதல்வர் எடப்பாடி அருகில் நின்ற அமைச்சரை பாராட்டினார்.
அதன் பிறகும் பல களம் கண்டு சீறியது. சொம்பனை அடக்கினால் என்று பரிசுகளை வாரி வழங்கும் அறிவிப்புகளை வீரர்கள் கேட்டு உற்சாகமானாலும் கொம்பனை தொடக்கூட முடியவில்லை.
இந்த நிலையில் தான் சொந்த தொகுதியான விராலிமலையில் உள்ள தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட தி.முக. வேட்பாளர் பழனியப்பனின் தென்னலூர் கிராமத்தில் 11ந் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொம்பனை அனுப்பிய அமைச்சர் விஜயபாஸ்கர் வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடங்கி வைக்க ஒவ்வொரு காளையாக வாடிவாசலில் வளம் வந்தது. அப்போது அமைச்சரின் யாருக்கும் அடங்காத கொம்பன் வருகிறது முடிஞ்சவங்க புடிச்சுப் பாருங்க என்று அறிவிப்பு வெளியான நேரத்தில் அமைச்சர் தரப்பு ஆராவாரம் செய்தனர்.
மாடுபிடி வீரர்கள் பதுங்கி பாய தயாரானார்கள் கொம்பன் சீறிக் கொண்டு வெளியே வரும் போது தடுப்பு மரத்தில் மோதி கீழே சாய ஒட்டுமொத்த மாடுபிடி வீரர்களும் கொம்பன் விழுந்த இடத்திற்கு ஒடினார்கள் ஒரு வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு கொண்டு செல்ல கொம்பன் உயிர் போய்விட்டது.
கொம்பன் களத்தில் இறந்த தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அவரின் ஆதரவாளர்களும் ராப் பூசல் கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினார்கள். அமைச்சரின் தோட்டத்தில் மாலை மரியாதைகளுடன் கொம்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுதனர்.
இந்த நிலையில் நேற்று வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து ஊருக்கு திரும்பிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொம்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் கொம்பனுக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஒ.பி.எஸ் விரைவில் வரலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு காளை தான் என்றாலும் அதன் வீரம் அமைச்சர் குடும்பத்தை மட்டுமின்றி ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- இரா.பகத்சிங்