புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர், "சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர். கடந்த 6 ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற நாங்கள் விமான தள கம்பெனி உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். புதுச்சேரி விமான நிலையத்தில் புதுவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது பற்றியும், புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசனை செய்தோம். சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, சிங்கப்பூர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி கரசூர் பகுதிகளில் விமான நிலையத்தை விரிவாக்கத்துக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று எங்களிடம் பேசினார்கள். புதுச்சேரியில் தொழில் தொடங்க 25 சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் இது சம்மந்தமாக எங்கள் அரசிடம் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்த உள்ளனர். மேலும் சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலை முதலீட்டாளர்கள் இடையேயும் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினோம்.
மேலும் தரம் வாய்ந்த மருத்துவமனையை காரைக்காலில் கட்டுவதற்கும், புதுச்சேரியில் பெரிய அளவில் நவீன தொழில்நுட்ப பூங்கா மற்றும் மால் கட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் தரமான விமான நிலையம், சுற்றுலாத்துறையில் முதலீடு மற்றும் தொழில்நுட்ப பூங்கா கட்ட ஆர்வம் காட்டினார்கள். புதிய பரிமாண வளர்ச்சியாக நன்யாங் பல்கலைக்கழகம் உலக நாடுகளில் இரண்டு, மூன்று இடங்களில் பல்கலைக் கழகம் கட்டவும் அதில் ஒன்று புதுச்சேரி மாநிலத்தில் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் " தனிப்பட்ட முறையில் நாங்கள் சிங்கப்பூர் சென்றது புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதுடன், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் சூழ்நிலை உருவாகும் திட்டங்களுக்காகவும் தான். இந்த சிங்கப்பூர் பயணம் பற்றி கடிதம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பி உள்ளேன். நாங்கள் விதிமுறைகள் படி சிங்கப்பூர் சென்றுள்ளோம். இது சம்மந்தமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, 'யார் இவர்களுக்கு சிங்கப்பூர் செல்ல அனுமதி கொடுத்தார்கள்?' என்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு சிங்கப்பூர் செல்ல அனுமதி இல்லையா? மாநில வளர்ச்சிக்காக நாங்கள் சிங்கப்பூர் சென்றோம்.
மேலும் உலக அளவில் 1000 பேர் பங்கேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தது புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைத்த பெருமை. இதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு 1000 கோடி முதலீடு, தொழில்நுட்ப பூங்காவிற்கு 150 கோடி உட்பட முதலீடுகள் செய்ய உள்ளனர்" என்றார்.
பின்னர் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக வெடிகுண்டு வீசி, அரிவாளால் கொலை போன்ற சம்பவங்கள் குறித்தும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.